நாமக்கல்: ஏரியில் மூழ்கி அக்காள்-தம்பி பலி - மூதாட்டியின் துணிச்சலால் உயிர் பிழைத்த மற்ற 2 சிறுவர்கள்..!
சேந்தமங்கலம் அருகே ஏரியில் தவறி விழுந்து அக்காள் தம்பி பலியானார்கள். அப்போது அங்கு வந்த அவர்களது பாட்டியின் துணிச்சலால் மற்ற 2 பேரன்கள் உயிர் பிழைத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள சிவ நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலன் (வயது 32). இவரது அண்ணன் கருப்புசாமி (36). அவர்களது 4 குழந்தைகள் பழைய பாளையம் பகுதியில் உள்ள அவர்களது பாட்டியுடன் இருந்தனர்.
இந்நிலையில் இன்று மதியம் சிறுவர்கள் சாப்பிட்டுவிட்டு பாத்திரங்களை கழுவுவதற்கு ஏரிக்கரையின் மேல் நடந்து வந்து கொண்டிருந்த போது பாலனின் மூத்த மகள் கனிஷ்கா (8) அவளது தம்பி மதன் (7) ஆகிய இருவரும் திடீரென்று தவறி ஏரிக்குள் விழுந்தனர். அதேபோல கருப்பசாமியின் மூத்தமகன் சஞ்சீவி (11) மிதிலேஷ் (8) ஆகிய இருவரும் தவறி ஏரியில் விழுந்தனர்.
அதைக் கண்டு பதறி அடித்து ஓடி வந்த அவர்களது பாட்டி சஞ்சீவி மற்றும் மிதிலேசை துணிச்சலாக மீட்டு கரை சேர்த்தார். ஆனால் கனிஷ்காவும் மதனும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதைக்கண்டு பாட்டி செல்லம் கதறி அழுதார்.
அந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏரியில் தவறி விழுந்து இறந்த கனிஷ்கா, மதன் உடல்களை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story