தூத்துக்குடியில் பயங்கரம்: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற சிறுமி


தூத்துக்குடியில் பயங்கரம்: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற சிறுமி
x
தினத்தந்தி 28 March 2022 1:18 AM IST (Updated: 28 March 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தனது தாயை 17 வயது சிறுமி படுகொலை செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 2 மகள், 1 மகனுடன் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் வைத்து அந்த பெண் தனது மூத்த மகளான 17 வயது சிறுமியை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி தனது ஆண் நண்பர்களான தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த தங்ககுமார் (வயது 28), கண்ணன் (22) ஆகியோரிடம் தெரிவித்து உள்ளார்.

படுகொலை

இதையடுத்து தங்ககுமார், கண்ணன் மற்றும் அவர்களது நண்பரான கோடாங்கி (26) ஆகிய 3 பேரும் இரவில் சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து சிறுமியின் தாயாரை சேலையால் கழுத்தை இறுக்கியதாகவும், கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் தங்ககுமார் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இந்த கொலை சம்பவம் உடனடியாக அக்கம்பக்கத்தில் தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலையுண்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் தொழில்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அவரது தாய் முயற்சி செய்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி, நண்பர்களுடன் சேர்ந்து தனது தாயை கொலை செய்ததாகவும் தெரியவந்தது. எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே சிறுமியையும், தப்பி ஓடிய கண்ணனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தனது தாயை 17 வயது சிறுமி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story