குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளம்: 1,200 ஏக்கர் நிலத்தை இஸ்ரோவிடம் தமிழக அரசு ஒப்படைப்பு..!


குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளம்: 1,200 ஏக்கர் நிலத்தை இஸ்ரோவிடம் தமிழக அரசு ஒப்படைப்பு..!
x
தினத்தந்தி 28 March 2022 9:23 AM IST (Updated: 28 March 2022 9:23 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு தமிழக அரசு 1,200 ஏக்கர் நிலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைத்து உள்ளதாக கே.சிவன் கூறினார்.

சென்னை, 

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு தமிழக அரசு 1,200 ஏக்கர் நிலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைத்து உள்ளதாக இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கே.சிவன் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது,

இந்தியாவில் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க மத்திய அரசும், தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. விரைவில் இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்க இருக்கிறது.

இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்க அ.தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். ஏவுதளம் அமைக்க 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலம் வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு 1,200 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து உள்ளது.

மீதம் உள்ள 1,033 ஏக்கர் நிலத்தை ஓரிரு மாதங்களில் ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. நிலம் ஒப்படைத்த பின்னர் கட்டுமானப்பணிகள் தொடங்கும்.

நிலம் ஒப்படைத்த பின்னர் கட்டுமானப்பணிகளுக்கு ஒரு ஆண்டு தேவைப்படும். அதற்கு பிறகு ராக்கெட் ஏவுவதற்கான பணிகள் நடக்கும். முதலில் ஒரு ஏவுதளம் அமைக்கப்படுகிறது. தேவையை பொறுத்து மற்றொரு ஏவுதளம் வரும் காலங்களில் அமைக்கப்படலாம்.

இந்தியாவில் முதன் முறையாக தனியார் முழுமையாக தயாரித்த ‘ஆனந்த்’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் விரைவில் பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. தனியாருடைய ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது. குறிப்பாக சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் அனுப்ப தயாரிக்கப்பட்டு வரும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் தனியாருக்கும், மாணவர்கள் வடிவமைக்கும் சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் ஏவவும் மிகுந்த பயனை அளிக்கும்.

சந்திரயான்-3 திட்டம் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். அதேபோல், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான், சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 செயற்கைகோள்கள் மற்றும் விண்கலங்களுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படிப்படியாக விண்ணில் ஏவப்பட உள்ளது என்று கூறினார்.

Next Story