முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார்


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார்
x
தினத்தந்தி 29 March 2022 12:26 AM IST (Updated: 29 March 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீன்பிடி வலை தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் ஜாமீன் நிபந்தனைப்படி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார். பின்னர் பரபரப்பு பேட்டி கொடுத்தார்.

சென்னை,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் உள்ளார். மீன்பிடி வலை தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் ஜாமீன் நிபந்தனைப்படி அவர் நேற்று காலை 10.30 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா முன்னிலையில் ஆஜராகி கையெழுத்து போட்டார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கையெழுத்து போட்டு விட்டு வெளியில் வந்த ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசை பொறுத்தமட்டில் தொழிலாளர் விரோத அரசாக உள்ளது. தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் இந்த அரசு மவுனமாக உள்ளது. சமையல் கியாஸ் ரூ.100 மானியம் தருவதாக சொன்னார்கள். அந்த வாக்குறுதியும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

இரட்டை வேடம்

நீட் தேர்வு விவகாரத்தில் எங்களுக்குத்தான் சூட்சுமம் தெரியும், வித்தை தெரியும் என்றார்கள். இப்போது நாங்கள் என்ன வழியை கையோண்டோமோ அதைத்தான் அவர்களும் கையாளுகிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரையில், மாணவ-மாணவிகளை நம்ப வைத்து கழுத்தை அறுத்த கதைபோல ஏமாற்றுகிறார்கள்.

விலாங்குமீன் பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும். அது போலத்தான் அனைத்திலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.

Next Story