‘துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது’ - சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி


‘துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது’ - சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 29 March 2022 3:12 AM IST (Updated: 29 March 2022 3:25 AM IST)
t-max-icont-min-icon

4 நாள் அமீரக சுற்றுப்பயணம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

அபுதாபி, 

முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் அரசுமுறை வெளிநாடு பயணமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதி இரவு துபாய் சென்றார். துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்துவைத்த அவர் தொடர்ந்து 2 நாட்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அபுதாபி சென்றார். துபாய், அபுதாபி பயணம் மூலம் மொத்தம் தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை அபுதாபியில் நடந்த நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். மேலும் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வு, தமிழ்ச்சங்க நிகழ்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னைக்கு திரும்பினார். தமிழகம் திரும்பிய முதல்-அமைச்சருக்கு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தொழிற்துறை செயலர் கிருஷ்ணன், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திபில் பேசிய அவர், “துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டினர். தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீகளை ஈர்க்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையேழுத்தாகின. 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தக்களும் வெறும் காகித பூக்களாகவே இருந்தன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரித்தார்.

Next Story