சட்டம் - ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்


சட்டம் - ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 March 2022 4:42 AM IST (Updated: 29 March 2022 4:42 AM IST)
t-max-icont-min-icon

சட்டம் - ஒழுங்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று கடந்த 10 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடந்த கூட்டு பலாத்காரத்தை தொடர்ந்து, கடந்த 23-ந் தேதி ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

மேலும், மார்ச் மாதத்திலேயே திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை கிராமத்தில் உள்ள தி.மு.க. கிளைச்செயலாளர், 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும்; மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தி.மு.க. கிளைச்செயலாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

போதை மாத்திரை விற்பனை

இந்த அவலத்தின் ஈரம் காயும் முன், 27-3-2022 அன்று ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சா வியாபாரிகள் போலீஸ் மீது வெடிகுண்டு வீசி தப்பி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும் ‘‘சென்னையில் துப்பாக்கியுடன் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த கும்பல் கைது’’ என்று செய்தியும் வந்துள்ளது. சுமார் 100 பேரை பயன்படுத்தி சுதந்திரமாக ஒருவன் அரக்கோணம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளான். தலைநகர் சென்னையில் துப்பாக்கி உதவியுடன் போதை மாத்திரை விற்பனையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.

தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சியில், சமூக விரோதிகள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவது சர்வசாதாரணமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்கள் சுதந்திரமாக செயல்பட்டனர்.

சட்டப்படி கடும் நடவடிக்கை

அனைத்து குற்றங்களுக்கும் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தி.மு.க. அரசு, ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில், குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள், அதிகாரிகள், காவலர்கள் என்று யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க. அரசு இனியாவது சட்டம் - ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story