தமிழகத்தில் வங்கி பணிகள் முடங்கின: பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி


தமிழகத்தில் வங்கி பணிகள் முடங்கின: பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 29 March 2022 5:55 AM IST (Updated: 29 March 2022 7:47 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி பணிகள் முடங்கின. பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.

இதன்படி முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது.

முக்கிய கோரிக்கைகள்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,. தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

தமிழகத்தில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொதுவேலைநிறுத்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் பங்கேற்றுள்ளன.

வங்கி பணிகள் பாதிப்பு

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் வேலைக்கு வராததால் வங்கி பணிகள் முடங்கின. இதுபோல பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் போராட்டம் வலுவாக இருந்தது.

தமிழகத்தில் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் முடங்கியது. அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொது வேலைநிறுத்தம் காரணமாக சென்னை நுங்கம்பாக்கம் ஆயக்கார்பவனில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது. ஆயக்கார்பவன் வளாகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன (தமிழகம்) பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் தலைமையில் வருமான வரித்துறை ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய பொதுசெயலாளர் எம்.எஸ்.வெங்கடேசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் எம்.துரைபாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நாடு முழுவதும் 25 கோடி ஊழியர்களும், தமிழகத்தில் லட்சக்கணக்கான ஊழியர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஆண்டு (2021) ஜூன் 21-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.37 ஆயிரத்து 500 கோடி அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஊழியர்களை வஞ்சிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் அடையாளமாக இந்த 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் டெல்லியில் அனைத்து தொழிற்சங்கங்களும் விரைவில் ஒன்றுகூடி மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்படும் என்று மத்திய, மாநில அரசு எச்சரிக்கையால் சாஸ்திரிபவனில் உள்ள பெரும்பாலான அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின. மின்சார ரெயில்களும் வழக்கம் போல் ஓடின. அண்ணா சாலை தலைமை தபால்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் தலைகாட்டிவிட்டு மீண்டும் பணியை தொடர்ந்தனர். தலைமை செயலகம், எழிலகம் போன்ற மாநில அரசு அலுவலகங்களில் வழக்கம் போல் பணிகள் நடைபெற்றன.

தொழிலாளர்கள் சாலை மறியல்

சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. பொருளாளர் கி.நடராஜன், சி.ஐ.டி.யு. நிர்வாகி ஆறுமுக நயினார், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி டி.வி.சேவியர், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி டி.எம்.மூர்த்தி, எச்.எம்.எஸ். நிர்வாகி ராஜா ஸ்ரீதர், எம்.எல்.எப். நிர்வாகி அந்தரிதாஸ், எல்.எல்.எப். நிர்வாகி க.பேரறிவாளன், மின் ஊழியர்கள் மத்திய அமைப்பின் மாநில தலைவர் ஜெய்சங்கர் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கி.நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழிலாளர், விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும். புதிய மின்சார சட்ட மசோதாவை கைவிட வேண்டும். தேசத்தின் கேந்திரமாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. எல்.ஐ.சி. பங்குகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. தொழிலாளர்களை பாதிக்கும் மோட்டார் வாகன சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை தொழிலாளர் வர்க்கம் ஓயாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலை மறியல் போராட்டம் காரணமாக தாராப்பூர் டவர் முதல் அண்ணா சிக்னல் வரையில் ஒருவழிபாதையாக மாற்றப்பட்டது. எனினும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்தால் பெரும் தாக்கம்

வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்றதால் வங்கி சேவை முற்றிலும் முடங்கியது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தலைமையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:-

பொதுவேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளில் பணம் போடுவது, எடுப்பது போன்ற பணிகள் நடைபெறவில்லை. பல ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் முடங்கி போயுள்ளன. வங்கி கிளைகள் இடையே நடைபெறும் பண பரிமாற்றம், குறிப்பாக காசோலைகள் மீதான செயல்பாடுகள் நடைபெறவில்லை. இதனால் பெருமளவு காசோலைகள் வங்கிகளில் முடங்கி போயுள்ளன. பண பரிவர்த்தனை நடைபெறாமல், வரித்தொகை உள்ளீடு செய்ய முடியாமல் அரசின் கருவூல சேவை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தொழில் ரீதியாக பார்க்கும்போது அனைத்து வகையான ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்கள், திட்டப்பணிகளுக்கு அனுமதி கிடைக்கப்பெறவில்லை. இதனால் தொழில் சார்ந்த வணிக பணிகள், பண பரிவர்த்தனைகள் ஆட்டம் கண்டுள்ளன. நிச்சயம் பொருளாதார நிலை பாதிப்பை கண்டுள்ளது. இது நீடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய சரிவை, நஷ்டத்தை அரசு சந்தித்தாக வேண்டும். எனவே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். பொதுவாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பது தொழிலாளர்களின் விருப்பம் அல்ல. ஆனால் நியாயமான கோரிக்கைகளுக்காக, வாழ்வாதார பிரச்சினைகளுக்காக போராடும் நிலைக்கு வரும்போது, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஏற்கனவே கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வரும் சூழலில், அரசு ஊழியர்களின் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வணிகர்கள் பாதிப்பு

வங்கி சேவை முடங்கியதால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து மேலும் 2 நாட்கள் ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் ஏ.டி.எம். மையங்களில் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அன்று மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது பின்னர் மீண்டும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story