போராட்டங்களின் மூலமே மத்திய பா.ஜ.க. அரசுக்கு உரிய பாடம் புகட்ட முடியும் - கே.எஸ்.அழகிரி
போராட்டங்களின் மூலமே மத்திய பா.ஜ.க. அரசுக்கு உரிய பாடத்தை புகட்ட முடியும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியதன் மூலம் ரூபாய் 26 லட்சம் கோடியை மோடி அரசு வருவாயாக பெருக்கிக் கொண்டது. இதன் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் விலை ரூபாய் 29.02 ஆகவும், டீசல் விலை ரூபாய் 27.58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2014-ம் ஆண்டில் ரூபாய் 410 ஆக இருந்தது. இன்றைக்கு ஆயிரம் ரூபாயை எட்டியிருக்கிறது. மோடி ஆட்சியில் இதுவரை 540 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் தாய்மார்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி வருவதைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மார்ச் 31 (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பை வெளிப்படுத்த தங்கள் வீடுகளின் முன்பும், பொது இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், பெட்ரோல் கேன் போன்றவற்றிற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏப்ரல் 2 முதல் 4 வரை மாவட்ட தலைநகரங்களில் பொது மக்களைத் திரட்டி பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை மத்திய பா.ஜ.க. அரசுக்கு உணர்த்துகிற வகையில் இப்போராட்டம் வெற்றிகரமாக அமைய பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய போராட்டங்களின் மூலமே மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசுக்கு உரிய பாடத்தை மக்களால் புகட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story