அரியாங்குப்பம் பாகூர் காரைக்காலில் காங்கிரஸ் தி மு க கூட்டணி கட்சியினர் சாலை மறியல்


அரியாங்குப்பம்  பாகூர்  காரைக்காலில் காங்கிரஸ்  தி மு க  கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 March 2022 10:01 PM IST (Updated: 29 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பம், பாகூர், காரைக்காலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்
அரியாங்குப்பம், பாகூர், காரைக்காலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாள் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் 2-வது நாள் போராட்டம் நடைபெற்றது. 
புதுச்சேரியின் புறநகரான அரியாங்குப்பம் வீராம்பட்டினம் வீதி, பழைய கடலூர் ரோடு, மார்க்கெட் ரோடு, புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வில்லியனூர், பாகூர்,  திருக்கனூர், திருபுவனை, காலாப்பட்டு, சேதராப்பட்டு பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. கிராமப்புறங்களில் உள்ள சிறிய கடைகள் மட்டும் திறந்திருந்தன. பாலகம், மெடிக்கல், பெட்ரோல் பங்க் ஆகியவையும் வழக்கம்போல் செயல்பட்டன.

சாலைகள் வெறிச்சோடின

முழு அடைப்பையொட்டி ஆட்டோ, தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் காரைக்காலில் ஒருசில கடைகளை தவிர வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. இதேபோல் கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதியிலும் கடைகள் திறந்திருந்தன. 

அரியாங்குப்பம்

இதற்கிடையே மத்திய அரசை கண்டித்து அரியாங்குப்பம் புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள்  அய்யப்பன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தி.மு.க. தொகுதி செயலாளர் சீதாராமன்,   தி.மு.க.  பிரமுகர் கோபாலகிருஷ்ணன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியல் செய்ய திரண்டனர். அவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.
தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மணவெளி தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் ராஜாராமன் உள்பட 50 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

பாகூர்

பாகூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமையில் நடந்த சாலைமறியலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஈடுபட்டனர். அவர்கள் பாகூர் பூலோகமாரியம்மன் கோவில் எதிரில் சிலிண்டர் வைத்து விறகு அடுப்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால்

காரைக்காலில் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விண்சென்ட் தலைமை தாங்கினார். நாகதியாகராஜன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த மறியல் போராட்டத்தால் புதுச்சேரி - நாகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே காரைக்கால் நகர போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்துபோக செய்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story