மயிலாப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீ விபத்து


மயிலாப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தீ விபத்து
x
தினத்தந்தி 30 March 2022 3:25 AM IST (Updated: 30 March 2022 3:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளிட்ட 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி.காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லீனா. இவர் டி.டி.கே சாலையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அழகு நிலையத்தில் பணியாற்றக்கூடிய உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரீனா குப்தா (வயது 30), நாகாலாந்தை சேர்ந்த சோல்னாசங் (27), அலீம்லாசங் (27), மோனிகா (23) ஆகிய 4 இளம் பெண்களை அந்த குடியிருப்பில் 3-வது மாடியில் அவர் தங்கவைத்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் 4 பேரும் தூங்கி கொண்டிருந்த போது, திடீரென வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறி, தீ எரிந்து கொண்டிருந்தது. தூக்கத்தில் இருந்து விழித்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் 4 பேரும் அலறினர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பத்தினர், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர், தேனாம்பேட்டை, அசோக் நகர் தீயணைப்புத்துறையினர் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மின்கசிவு

மேலும், வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், தீ விபத்து எப்படி, எதனால் ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் 2-வது மாடியில் தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை செயல்பட்டு வருகிறது.

இங்கு நில அளவை கமிஷனர் வினய் ஓய்வெடுக்கும் அறையில் உள்ள ஏ.சி.யில் இருந்து நேற்று முன்தினம் இரவு கரும்புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த திருவல்லிக்கேணி தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அறையில் இருந்த சோபா, ஏ.சி., ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசார், நடத்திய விசாரணையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Next Story