போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் நியமனம்: ராஜகண்ணப்பன் இலாகா திடீர் மாற்றம்


போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் நியமனம்: ராஜகண்ணப்பன் இலாகா திடீர் மாற்றம்
x
தினத்தந்தி 30 March 2022 5:58 AM IST (Updated: 30 March 2022 5:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அமைச்சர்கள் இலாகாவில் நேற்று திடீர் மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பனுக்கு பிற்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டார்.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது.

அந்த அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றனர்.

அமைச்சரவையில் மாற்றம்

இந்தநிலையில் தமிழக அமைச்சர்கள் 2 பேரின் இலாகா திடீரென மாற்றி அமைக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து அமைச்சராகவும் மாற்றப்பட்டனர்.

கவர்னர் அறிவிப்பு

இதுகுறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் அலுவலகமான ராஜ்பவனில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில், போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திகள் சட்டம் ஆகிய துறைகளை நிர்வகித்து வந்த அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்துத் துறையின் அமைச்சராக மாற்றப்பட்டார்.

எனவே ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்றும், எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சர் என்றும் அழைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் மாற்றம்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன். முன்பு அ.தி.மு.க.வில் இருந்த போதும் இவர் அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திடீரென்று மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 10 மாத தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முதல் அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன?

அமைச்சரவை மாற்றத்துக்கான காரணம் வெளியாகவில்லை. என்றாலும் நேற்று முன்தினம் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் போது தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதேபோன்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதியை சொல்லி திட்டி மிரட்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ.) குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்த விவகாரமும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த இரு விவகாரங்கள் காரணமாக அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story