ரங்கசாமியை பா ஜ க செயல்படவிடாமல் தடுக்கிறது சட்டசபையில் எம் எல் ஏ க்கள் குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் ரங்கசாமியை பா.ஜ.க. செயல்படவிடாமல் தடுக்கிறது என சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்கள்.
புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமியை பா.ஜ.க. செயல்படவிடாமல் தடுக்கிறது என சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்கள்.
புதுவை சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பேசியதாவது:-
அரைகுறையாக பணிகள்
நேரு (சுயேச்சை) : இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை. அதிகாரிகளுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர்களது செயல்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 31-ந்தேதியுடன் திட்டம் முடிவடைவதாக கூறப்படுகிறது. இதற்கு காலநீட்டிப்பு உண்டா? பணிகள் அனைத்தும் அரை குறையாக உள்ளது. பெரிய மார்க்கெட் பகுதியில் எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்பு. உள்ளே நுழையவே முடியவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேச ஒரு வாராமாவது சட்டசபையை நடத்த வேண்டும்.
கூண்டுக்கிளி
சிவசங்கரன் (சுயே): எனது தொகுதியில் சரியான ரோடு வசதி இல்லை. 110 நகர் உள்ளது. ஆனால் 5 நகரில்தான் ரோடு போட்டு உள்ளேன். மீதி நகர்களிலும் ரோடு போட நிதி ஒதுக்கி தர வேண்டும்.
நாஜிம் (தி.மு.க.) : பா.ஜ.க. ஆட்சி என்றால் அப்படித்தான் இருக்கும். மத்தியில் இருந்து காசு வாங்கி வாருங்கள்.
சிவசங்கரன்: வணிகர்களின் நலன்காக்க நிதி ஒதுக்குவதாக முதல்-அமைச்சர் கூறினார். அதை உடனடியாக செய்யவேண்டும்.
வைத்தியநாதன் (காங்) : முதல்-அமைச்சர் செய்ய நினைப்பதை பா.ஜ.க. தலையீட்டால் செய்ய முடியவில்லை.
நாஜிம்: முதல்-அமைச்சர் கூண்டுக்கிளியாக உள்ளார்.
பாலாறும், தேனாறும்..
வைத்தியநாதன்: 5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டார்கள்.
நாஜிம்: புதுவை அரசுக்கு வழங்கும் மானியத்தை கடந்த ஆண்டைவிட கூடுதலாக ஒரு பைசாகூட மத்திய அரசு உயர்த்திதரவில்லை.
பி.ஆர்.சிவா: அரசு பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் இந்த தலைமை செயலாளரை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் ஒன்றும் ஓடவில்லை.
நேரு: தலைமை செயலாளர் மக்கள் நலத்திட்ட பணிகளை தடுக்கிறார்.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்
நாஜிம்: இப்போது நமது முதல்-அமைச்சர் நிம்மதியாக ஆட்சி நடத்துகிறார் என்று அவரது நெஞ்சை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.
வி.பி.ராமலிங்கம்: சென்ற ஆட்சியை விட இந்த ஆட்சி நல்லதாக உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: அப்போது பா.ஜ.க. கவர்னர் கிரண்பெடியை வைத்து ஆட்சியை ஒழித்துக்கட்டியது. அந்த ஆட்சியில் நீங்களும்தான் இருந்தீர்கள்.
வைத்தியநாதன்: அதனால்தான் கிரண்பெடி கோர்ட்டில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தடுக்கிறது
நாக.தியாகராஜன் (தி.மு.க.): காரைக்காலில் பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. சாலை வசதிகள் இல்லை. உட்புற சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரியும் அதேநிலையில்தான் உள்ளது. எனவே காரைக்கால் பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அனிபால் கென்னடி (.தி.மு.க.): மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டீர்கள். ஆனால் தரவில்லை. பா.ஜ.க., முதல்-அமைச்சர் எதையும் செய்யவிடாமல் தடுக்கிறது. பொதுப்பணி, உள்ளாட்சி, மின்துறை என எதிலும் நிதியில்லை என்கிறார்கள்.
அசோக்பாபு (பா.ஜ.க.): பா.ஜ.க. தடுப்பதாக கூறுகிறார்கள். அவர்களை பா.ஜ.க. ஆளும் மாநிலத்துக்கு அழைத்து செல்லுங்கள்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: அப்படியானால் புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லையா?
அசோக்பாபு: மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட கட்சி பா.ஜ.க.
நேரு (சுயே) : 5 மாநில தேர்தலுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிவிட்டீர்கள்.
அசோக்பாபு: உக்ரைனிலிருந்து ஆபரேசன் கங்கா மூலம் புதுச்சேரி மாணவர்கள் 29 பேரை பிரதமர் மீட்டுள்ளார்.
சம்பத் (தி.மு.க.): இப்போது அவர்களின் நிலை என்ன?
இவ்வாறு விவாதம் நடந்தது.
Related Tags :
Next Story