சீட்டு பணம் பிரச்சினை பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் தொழிலாளி கைது 3 பேருக்கு வலைவீச்சு
சீட்டு பணம் பிரச்சினையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
சீட்டு பணம் பிரச்சினையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து தகராறு
புதுவை குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மை (வயது 38). தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கள பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சீட்டும் நடத்தி வருகிறார். இவரிடம் மூலக்குளத்தை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி விக்ரமன் (வயது 44) மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 3 மாதங்களாக ரூ.15 ஆயிரம் சீட்டு கட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விக்ரமன் தான் கட்டிய சீட்டு பணத்தை திரும்ப தரும்படி வள்ளியம்மையிடம் கேட்டார். அதற்கு அவர், தன்னிடம் தற்போது பணமில்லை, 2 மாதம் கழித்து பணம் தருவதாக கூறினார்.
இந்தநிலையில் விக்ரமன் அவரது நண்பர்கள் 3 பேருடன் வள்ளியம்மையின் வீட்டுக்கு சென்றார். அப்போது வள்ளியம்மை வெளியே சென்றிருந்ததால், அவரது மகன் பூவரசனிடம் பணம் கேட்டு அவர்கள் தகராறு செய்தனர்.
கொலை மிரட்டல்
இதுபற்றி செல்போன் மூலம் தனது தாயாருக்கு பூவரசன் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த வள்ளியம்மை, வீட்டில் வந்து ஏன் தகராறு செய்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டார். அப்போது விக்ரமனுடன் வந்தவர்கள் வள்ளியம்மை கழுத்தில் கத்தியை வைத்து பணத்தை கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் வள்ளியம்மை புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்ரமனை கைது செய்தனர். மற்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story