வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை


வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை
x
தினத்தந்தி 31 March 2022 5:21 AM IST (Updated: 31 March 2022 5:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை பெட்ரோல் விலை தொட்டு இருக்கிறது. நேற்று ஒரு லிட்டர் 106 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

சென்னையில் கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 58 காசுக்கும், டீசல் 85 ரூபாய் 88 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து விலை ஏறுமுகத்திலேயே இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 106 ரூபாய் 66 காசுக்கும், டீசல் 102 ரூபாய் 59 காசுக்கும் விற்பனை ஆனது. அப்போது மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ.5-ம், டீசல் மீதான கலால் வரியில் ரூ.10-ம் குறைத்தது.

இதனால் அதற்கு மறுநாள் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 26 காசும், டீசல் லிட்டருக்கு 11 ரூபாய் 26 காசும் குறைந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுக்கும், டீசல் 91 ரூபாய் 33 காசுக்கும் விற்பனை ஆனது. அதன்பின்னர், விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, கடந்த 22-ந் தேதியில் இருந்து மீண்டும் விலை உயரத்தொடங்கியது.

புதிய உச்சம்

அதன் தொடர்ச்சியாக விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இடையில் 24-ந் தேதி மட்டும் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அந்த வகையில் கடந்த 10 நாட்களில் 9-வது நாளாக நேற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து காணப்பட்டது.

நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 106 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட விலைதான் அதிகபட்ச உச்சமாக இருந்தது. தற்போது அந்த விலையையும் கடந்து இருக்கிறது.

டீசல் விலையை பொறுத்தவரையில், நேற்று லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 96 ரூபாய் 76 காசுக்கு விற்பனை ஆனது.

காரணம் என்ன?

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றங்கள் இருந்த நேரத்தில் கூட, பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லாமலே காணப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் விலை ஒருபீப்பாய் 140 டாலராக இருந்தது.

சுமார் 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த 22-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை உயரத்தொடங்கியது. ஆனால் அப்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115.62 டாலர் என்ற அளவில்தான் இருந்தது.

கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தும், பெட்ரோல்-டீசல் விலை உயருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கிய காரணமாக, சுமார் 4 மாதங்களாக விலை மாற்றம் இல்லாமல் இருந்த காலங்களில் விலை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அதனை இப்போது சரிகட்டுவதற்கு விலை உயர்த்தப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனிவரக்கூடிய நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துதான் காணப்படும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story