கும்பகோணம் அருகே 5 அடி உயர நடராஜர் உலோக சிலை மீட்பு...!


கும்பகோணம் அருகே  5 அடி உயர நடராஜர் உலோக சிலை மீட்பு...!
x
தினத்தந்தி 31 March 2022 9:00 AM IST (Updated: 31 March 2022 8:55 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே 5 அடி உயர நடராஜர் உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு உள்ளனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள டி.மாங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சொந்தமான சிலை பட்டறையில் பழமையான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், செல்வராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோர்ட்டில் முன் அனுமதி பெற்று சதீஷ்குமாரின் சிலை பட்டறையில் இன்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 5 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட பழமையான நடராஜர் உலோக சிலை மறைத்து வைக்கப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. 

இந்த சிலைக்கான முறையான ஆவணங்கள் குறித்து சதீஷ்குமாரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நடராஜர் சிலையை போலீசார் மீட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மீட்கப்பட்ட நடராஜர் உலோக சிலையை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளதாகவும், இந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

Next Story