மருத்துவமனைக்கு அழைத்து வந்த கைதி தப்பியோட்டம் - 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்...!


மருத்துவமனைக்கு அழைத்து வந்த கைதி தப்பியோட்டம் -  2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்...!
x
தினத்தந்தி 31 March 2022 11:00 AM IST (Updated: 31 March 2022 10:55 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனைக்கு அழைத்து வந்த கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

பட்டுக்கோட்டை, 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அருகே வெட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவருடைய மகன் மன்னார் என்கிற அருண்சந்தர் (வயது 32). இவர் மீது பட்டுக்கோட்டை மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

வழக்குகள் தொடர்பாக தலைமறைவாக இருந்த இவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இவர் பதுங்கி இருக்கும் இருப்பிடம் குறித்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார், பட்டுக்கோட்டையை அடுத்த ராஜாமடம் அக்னி ஆற்று பால பகுதிக்கு சென்று, அங்கு பதுங்கி இருந்த மன்னார் என்கின்ற அருண் சந்தரை கைது செய்ய முயற்சித்தனர்.

போலீசாரின் வருவதை அறிந்த மன்னார் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல பாலத்தில் இருந்து குதித்தபோது அவருடைய வலது கால் முறிந்தது. அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போலீசார், விசாரணைக்கு பின் அவரை சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி மன்னார் என்கின்ற அருண்சந்தர் பெயில் எடுத்துள்ளார்.  மேலும் 2 வழக்குகளில் அவருக்கு பிடிவாரன்ட் இருந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சைக்காக தாலுக்கா போலீசார் அவரை பட்டுக்கோட்டை அழைத்து வந்த போது  போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓடிவிட்டார்.

கைதி தப்பி ஓடும் வகையில் அஜாக்கிரதையாக இருந்த 2 போலீசாரையும் தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


Next Story