விழுப்புரம் அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் - தாய்மாமன் கைது
விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி, அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். உடனே வகுப்பு ஆசிரியை ஹேமலதா என்பவர், அந்த மாணவியை தனியாக அழைத்துச்சென்று பேசியுள்ளார். அப்போது அந்த மாணவி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி ஆசிரியையிடம் கூறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுபற்றி உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவரது அறிவுரையின் பேரில் ஆசிரியை ஹேமலதா, இதுபற்றி விழுப்புரம் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மாணவியின் பெற்றோரையும் வரவழைத்து நடந்த சம்பவம் பற்றி எடுத்துக்கூறினார்.
தொடர்ந்து பெற்றோர் அந்த மாணவியிடம் விசாரித்த போது, தன்னை கடந்த சில நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தாய்மாமனான ராஜேந்திரன் மகன் சசிக்குமார்(28) மற்றும் அவரது நண்பர்கள் 9 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், மாணவியின் பெற்றோர் புகாா் கொடுத்தனா். அதன் பேரில் சசிக்குமார் மற்றும் சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூரில் நேற்று முன்தினம் காதலன் கண்முன்னே காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது விழுப்புரம் அருகே பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story