ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் - அமைச்சர் மெய்யநாதன்


ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் - அமைச்சர் மெய்யநாதன்
x
தினத்தந்தி 31 March 2022 11:05 AM IST (Updated: 31 March 2022 11:05 AM IST)
t-max-icont-min-icon

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார்.

சென்னை,

உலக அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் “செஸ் ஒலிம்பியாட்” முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.   

இந்த சூழலில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை இந்த ஆண்டிற்கான போட்டிகள் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ரஷியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் ரத்து செய்து வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் மாஸ்கோவில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் 44 போட்டிகள் நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

செஸ்போட்டியில் கலந்து கொள்ளும் 75 இந்திய கிராண்ட் மாஸ்டர்களில் 24 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story