திருப்பூர்: கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - பனியன் கம்பெனி உரிமையாளர்கள் 2 பேர் உயிரிழப்பு....!


திருப்பூர்: கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து - பனியன் கம்பெனி உரிமையாளர்கள் 2 பேர் உயிரிழப்பு....!
x
தினத்தந்தி 31 March 2022 11:45 AM IST (Updated: 31 March 2022 11:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பனியன் கம்பெனி உரிமையாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் 

திருப்பூர் மாவட்டம் கூத்தம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது47),  முருகேசன்(49). இவர்கள் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து முதலீட்டார்கள் பாலாஜியின் நிறுவனத்திற்கு வந்தனர். 

இதையடுத்து நேற்று நள்ளிரவு, முதலீட்டார்களை கேரளா மாநிலம், கொச்சின் நெடுமஞ்சேரியில் உள்ள விமான நிலையத்திற்கு வழியனுப்புவதற்காக ஒரு காரில் பாலாஜி, முருகேசன் மற்றும் இவர்களது நண்பர்கள் பதுருதீன், மைனுதீன் ஆகியோர் சென்றனர்.

பின்னர், 4 பேரும் காரில் மீண்டும் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.  கார் வாளையாறு ஆர்.டி.ஓ சோதனைச் சாவடி அருகே வந்த போது, சாலையில் ஓரத்தில் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. 

இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்தது. இதில் காரில் பயணம் செய்த பாலாஜியும், முருகேசனும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

படுகாயமடைந்து உயிருக்கு போராடிய பதுருதீன், மைனுதீன் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பாலக்காட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் கிடைத்ததும் வாளையார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் விபத்தில் இறந்த பாலாஜி மற்றும் முருகேசன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து வாளையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முதல்கட்ட விசாரணையில் தூக்க கலக்கத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் மோதி இருப்பது தெரியவந்துள்ளது. 

Next Story