ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதில் ரூ.40 லட்சம் கையாடல்
ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதில் ரூ.40 லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதில் ரூ.40 லட்சம் கையாடல் செய்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையங்கள்
புதுச்சேரி லாஸ்பேட்டை பொதிகை நகரில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது.
அந்த தனியார் நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக லாஸ்பேட்டை சாந்தி நகர் இளங்கோ வீதியை சேர்ந்த சிவராஜன் (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் உள்ள அந்த தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பி வருகின்றனர்.
ரூ.40 லட்சம் கையாடல்
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் கணக்குகளை சமீபத்தில் ஆடிட்டர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த சில மாதங்களாக ஏ.டி.எம். மையங்களில் நிரப்பப்பட்ட தொகையில் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி சிவராஜன் முத்திரையர்பாளையம் வழுதாவூர் சாலை, புதுச்சேரி 100 அடி சாலை, புதுவை பஸ் நிலையம் அருகே உள்ள 3 ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.39 லட்சத்து 76 ஆயிரத்தை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தனியார் நிறுவனத்திற்கு மின்கட்டணம் செலுத்துவதற்காக கொடுக்கப்பட்ட ரூ.46 ஆயிரத்து 397 செலுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் 3 ஏ.டி.எம். மையங்களிலும் பணம் நிரப்பும்போது சிவராஜன் உடன் சென்றதும் தெரியவந்தது.
வலைவீச்சு
இது குறித்து பெரியகடை போலீசில் பணம் நிரப்பும் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story