சென்னையின் 2-வது விமான நிலையம் அமையப்போவது எங்கே? தமிழக அரசு விரைவில் இறுதி முடிவு


சென்னையின் 2-வது விமான நிலையம் அமையப்போவது எங்கே? தமிழக அரசு விரைவில் இறுதி முடிவு
x
தினத்தந்தி 1 April 2022 12:32 AM IST (Updated: 1 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க பரனூர், பரந்தூர் ஆகிய இடங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஒரு இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து விரைவில் அறிவிக்கிறது.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

அதேவேளையில் சென்னையில் 2-வது விமான நிலையத்தை உருவாக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.

இடம் தேர்வு

அதன்படி, இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை விமான போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த பணியை ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

அதாவது முதற்கட்டமாக 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை இறுதி செய்ய ஆணையம் தேவையான நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி, 2-வது விமான நிலையம் அமைக்க உகந்த இடங்களை தேர்வு செய்து அளிக்க தமிழக அரசிடம் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் கோரியது.

ஆய்வு

இதைத்தொடர்ந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள பரனூர், பரந்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்து மத்திய விமான போக்குவரத்து ஆணையத்துக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.

இந்த 4 இடங்களிலும் விமான போக்குவரத்து ஆணைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து வசதி, தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு 2-வது விமான நிலையம் அமைக்க பரனூர், பரந்தூர் ஆகிய 2 இடங்களை விமான போக்குவரத்து ஆணையம் இறுதி செய்துள்ளது.

விரைவில் ஒப்புதல்

இதுகுறித்த அறிக்கையை விமான போக்குவரத்து ஆணையம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துக்கு அனுப்பி உள்ளது.

தமிழக அரசு விரைவில் 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை இறுதி செய்து ஒப்புதல் அளிக்கும். பரந்தூர் சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்திலும், பரனூர் 60 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளன. புதிய விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியது இருக்கும்.

விமான நிலையம் அமைய உள்ள இடத்தை தமிழக அரசு இறுதி செய்த பின்பு, நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்க உள்ளது.

பணிகள் தொடங்கும்

இந்த பகுதியில் 2-வது விமான நிலையம் அமையும்போது சிறந்த சாலை வசதி மற்றும் ரெயில் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் சென்னை நகரை ஒட்டி உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட புறநகர் பகுதிகள் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விமான நிலைய பணிகள் குறித்து விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறும்போது, 'சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக 2 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அரசின் முடிவுக்கு பின்பு ஒரு இடத்தை இறுதி செய்வோம். இதன்பின்பு, அங்கு தொழில்நுட்ப சாத்தியங்கள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட ஆய்வுகள் நடைபெறும்.

இதன்பின்னர் வழிகாட்டுதல் குழு ஒப்புதல் மற்றும் தேவையான அனுமதிகளை பெற்று புதிய விமான நிலையத்துக்கான பணிகள் தொடங்கும். இந்த பணிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டதில் இருந்து 7 முதல் 10 ஆண்டுகளில் முடிவு பெறும்' என்றார்.

Next Story