கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்டாரா? கல்லூரி மாணவி தற்கொலை


கட்டணம் செலுத்தாததால் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்டாரா? கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2022 1:40 AM IST (Updated: 1 April 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் கட்டணம் செலுத்ததற்காக வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்டதாக கூறப்படும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித்தொழிலாளியான இவரது மகள் சுபாஷினி(வயது 19). இவர், நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சுபாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

3 பேர் மீது வழக்கு

கல்லூரியின் பருவ கட்டணம் செலுத்தாமல் இருந்த மாணவி சுபாஷினியை வகுப்பறையின் வெளியில் நிற்க வைத்ததால் அவமானம் அடைந்து சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர், நாகூர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் நாகூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு பொறுப்பாளர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவ-மாணவிகள் சாலை மறியல்

இந்த நிலையில் மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ- மாணவிகள் நேற்று நாகை-வேளாங்கண்ணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இதே கோரிக் கையை வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு மறுத்து சாலைமறியல் செய்தனர்.

அப்போது, மாணவி படித்த கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனது நண்பரை பார்த்து விட்டு வெளியில் வந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர் அந்த பேராசிரியர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story