ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு


ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 April 2022 3:25 AM IST (Updated: 1 April 2022 3:25 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணங்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என்று கூறி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ., மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிறப்பு கோர்ட்டு, இருவரையும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அதில், அவதூறு வழக்கையும், சம்மனையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஏ.நடராஜன், விஜயநாரயண், புகழேந்தி சார்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வழக்கமானது

கட்சியில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ள காரணம் அவதூறை ஏற்படுத்தும் விதமாக உள்ளதா? என்பதை ஆராய்ந்து திருப்தி அடைவதற்கு முன்பே, மனுதாரர்கள் இருவருக்கும் சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. கட்சியில் இருந்து புகழேந்தியை நீக்கிய அறிவிப்பில் இடம் பெற்றுள்ள காரணம் வழக்கமான ஒன்றுதான்.

கடந்த 2017-ம் ஆண்டு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட நோட்டீசிலும் இதே காரணம்தான் கூறப்பட்டு உள்ளது. தவறு செய்யும் உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கும் சட்டப்படியான அதிகாரம், மனுதாரர்கள் இருவருக்கும் உள்ளது. இவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பத்திரிகைகளில் செய்தியாக வெளியிடுவது வழக்கமான நடவடிக்கைதான். எனவே, எந்த கோணத்தில் பார்த்தாலும், இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள காரணம் அவதூறானது இல்லை என்று தெளிவாகுகிறது. அதனால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீது புகழேந்தி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை ரத்து செய்கிறேன்.

Next Story