முகநூல் மூலம் அறிமுகம்... திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்
முகநூல் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை,
கோவையை சேர்ந்த 25 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வருண் (வயது 27) என்பவருடன் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து வருண் அந்த பெண்ணை நேரில் சந்திக்க விரும்புவதாக கூறினார். அதை ஏற்றுக் கொண்டதால் வருண் கோவை வந்து அந்த பெண்ணை சந்தித்தார். பின்னர் அவர்கள், ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணை வருண் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அவர், இதுபோல் ஆசை வார்த்தை கூறி பல முறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
அவர்களின் காதலை அறிந்த வருணின் தாய் ரேகா, சித்தப்பா சந்தோஷ் ஆகியோர் பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசி கடந்த ஜனவரி மாதம் திருமணம் குறித்து பேசினர். அப்போது அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து வருண், அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் பணம் கொடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் அந்த பெண்ணி டம் பேசுவதையும், பழகுவதையும் வருண் தவிர்த்தார். மேலும் திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வருணிடம் கேட்டார். ஆனாலும் அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த பெண் வருணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தினார்.
ஆனால் அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு வருணின் தாய் ரேகா மற்றும் அவருடைய சித்தப்பா சந்தோஷ் ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.
இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் மிரட்டல், நம்பவைத்து ஏமாற்றுதல், பலாத்காரம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வருண் மற்றும் தாய் ரேகா, சந்தோஷ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story