2 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை-மதுரை இடையே பாசஞ்சர் ரெயில் மீண்டும் இயக்கம்...!
2 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை-மதுரை இடையே பாசஞ்சர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
செங்கோட்டை,
மத்திய அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலை ஏப்ரல் 1-ந் தேதி முதல் இயக்க தென்னக ரெயில்வே அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை - மதுரை இடையே பாசஞ்சர் ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டனத்திலே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டை சந்திப்பில் இருந்த ரெயிலுக்கு மாலை கட்டி, திருஷ்டி சுத்தி, தேங்காய் உடைத்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர். பாசஞ்சர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரையில் இருந்து இன்றுமுதல் மாலை 5.15 மணிக்கு சிறப்பு ரெயில் (வ.எண்.0665) புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் அதேநாளில் செங்கோட்டையில் இருந்து ஒரு சிறப்பு ரெயில்(வ.எண்.0662) காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 10.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரெயில்களில் 13 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். ரெயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில்சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story