விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறார்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
விருதுநகரில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் பால் வியாபாரி ஹரிஹரன் (வயது 27). இவர் 22 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி நாடகமாடி உள்ளார்.
ஹரிஹரன் காதலிப்பதாக கூறியதை நம்பி அந்த பெண்ணும் அவருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ஹரிஹரன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்ததால், அவர் விரித்த வலையில் அந்த பெண் சிக்கினார்.
மேலும் இந்த வீடியோ காட்சியை ஹரிஹரன் தனது நண்பர்களான ரோசல்பட்டியை சேர்ந்த மாடசாமி (37), விருதுநகர் மொன்னி தெருவை சேர்ந்த ஜுனத்அகமது (27), பிரவீன் மற்றும் சில பள்ளி மாணவர்கள் என 8 பேருக்கு பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, இந்த கும்பலிலை சேர்ந்த அனைவரும் அந்த இளம்பெண்ணிடம் செல்போனில் எடுக்கபப்ட்ட வீடியோ காட்சியை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். தங்களது ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று வற்புறுத்தி அந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால், மன நெருக்கடிக்கு உள்ளான அந்த இளம்பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஹரிஹரன், ஜூனத், 4 பள்ளிமாணவர்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, ஜுனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் தற்போது மதுரையில் உள்ள கூர்நோக்கி இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த 4 சிறுவர்களிடமும் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சிறார்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படுகிறது. பின்னர் 4 பேரையும் ஒரே அறையில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணை, மேலும் கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சிறார்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட செல்போன், மெமரிகார்டு, லெப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்து அவர்களின் பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூகவலைதள பக்கங்களின் குழுக்களில் இடம்பெற்றவர்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள், உரையாடல்கள் உள்ளிட்டவை குறித்து சைபர் கிரைம் துறை உதவியுடன் மீட்டு அது குறித்து மேலும் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story