கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த காரைக்கால் கடலோர காவல் படைக்கு கூடுதல் ரோந்து கப்பல்


கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த காரைக்கால் கடலோர காவல் படைக்கு கூடுதல் ரோந்து கப்பல்
x
தினத்தந்தி 1 April 2022 9:25 PM IST (Updated: 1 April 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த காரைக்கால் இந்திய கடலோர காவல் மையத்தில் கூடுதலாக ஒரு ரோந்து கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்
கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த காரைக்கால் இந்திய கடலோர காவல் மையத்தில் கூடுதலாக ஒரு ரோந்து கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாப்பு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் நாகை கடலோர பகுதிகளை காரைக்கால் இந்திய கடலோர காவல் படை மையம் கண்காணித்து வருகிறது. இங்கு ஏற்கனவே ரோந்து கப்பல் உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மேலும் ஒரு ரோந்து கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. 
ஆந்திர மாநிலம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில், 2018-ம் ஆண்டு இந்திய கடலோர காவல் படைக்கு அர்ப்பணிக்கப்பட்ட சி-436 என்ற ரோந்து கப்பல், காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல் மையத்தில் இணைக்கப்பட்டது. 
புதிய ரோந்து கப்பல் வரவேற்பு நிகழ்ச்சியில் காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில்  நடைபெற்றது. நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், துறைமுகம் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

நவீன ரோந்து கப்பல்

நவீன எந்திர வசதிகளுடன் கூடிய இந்த ரோந்து கப்பல் 27.63 மீட்டர் நீளத்தில் உள்ளது. மணிக்கு 45 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. ஒரு உதவி கமாண்டன்ட் தலைமையில் 12 வீரர்கள் இந்த கப்பலில் பணியாற்றுகிறார்கள்.
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை பாதுகாப்பது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் இந்த ரோந்து கப்பல் பயன்படுத்தப்படும் என இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story