வீட்டு உபயோக மின் கட்டணம் அதிரடி உயர்வு


வீட்டு உபயோக மின் கட்டணம் அதிரடி உயர்வு
x
தினத்தந்தி 1 April 2022 11:07 PM IST (Updated: 1 April 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வீட்டு உபயோக மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். யூனிட்டுக்கு அதிகபட்சமாக 35 காசுகள் அதிகரித்துள்ளது.

புதுவையில் வீட்டு உபயோக மின்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். யூனிட்டுக்கு அதிகபட்சமாக 35 காசுகள் அதிகரித்துள்ளது.
மின்கட்டணம்
புதுவை மாநிலத்தில் மின் கட்டணமானது இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்தின் ஒப்புதலுடன் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி மின்துறை மின்கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் ஒப்படைத்தது.
ஆணையமும் ஆன்லைன் வாயிலாக பொதுமக்களிடம் கருத்துகேட்டது. இதைத்தொடர்ந்து புதுவையில் மின்கட்டணத்தை உயர்த்த ஆணையமும் ஒப்புதல் அளித்தது.
அமலுக்கு வந்தது
இதன்படி கடந்த காலங்களில் வீட்டு உபயோகத்துக்கு முதல் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ.1.55 ஆனது ரூ.1.90 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.2.60 ஆனது ரூ.2.75 ஆகவும் உயர்த்தி ஆணையம் அனுமதி அளித்தது.
இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு தொகை வரும் மாதங்களில் வழங்கப்படும் ரசீதுகளில் இடம்பெறும்.
மேலும் உயர்வு
முன்பு அறிவிக்கப்பட்ட உத்தேச பட்டியலில் 201 யூனிட் முதல் 300 யூனிட் வரையிலான மின்சார உபயோகத்துக்கு யூனிட் ஒன்றுக்கான கட்டணம் பழைய முறைப்படியே (யூனிட் ஒன்றுக்கு ரூ.4.65) ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.05 ஆகவும் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது 201 முதல் 300 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 35 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது யூனிட் கட்டணம் ரூ.4.65-ல் இருந்து ரூ.5 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 300 யூனிட்டுக்கு மேல் இருந்த கட்டணம் ரூ.6.05 என்பது, ரூ.6.45 ஆக உயர்ந்துள்ளது. அதாவது யூனிட்டுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டது.
மக்கள் அதிர்ச்சி
இந்த கட்டண உயர்வு  இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்ந்துள்ள நிலையில் மின்கட்டண உயர்வு புதுச்சேரி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story