வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்: புள்ளிவிவரங்களை முறைப்படுத்தி, மீண்டும் சட்டத்தை நிறைவேற்றுங்கள்


வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்: புள்ளிவிவரங்களை முறைப்படுத்தி, மீண்டும் சட்டத்தை நிறைவேற்றுங்கள்
x
தினத்தந்தி 2 April 2022 12:32 AM IST (Updated: 2 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் தமிழக அரசு புள்ளி விவரங்களை முறைப்படுத்தி, சட்டமன்றத்தில் மீண்டும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு செல்லாது என்று ஒரு தீர்ப்பு வந்துள்ளது. இது எங்களுக்கு வருத்தம். ஆனாலும் அந்த தீர்ப்பில் பல நல்ல அம்சங்கள் இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை 7 காரணங்களை கூறி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது.

சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் மேற்சொன்ன 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறானவை என்று சொல்லியிருக்கிறது. அதில் முக்கியமானது மாநிலத்துக்கு இடஒதுக்கீடு கொடுக்க அதிகாரம் உள்ளது. உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறது. தனிப்பட்ட சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு வழங்கலாம். ஜனாதிபதியின் ஒப்புதல் வாங்க வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லியுள்ளது. அதில் புள்ளி விவரங்கள் இல்லை என்ற ஒரே ஒரு காரணத்தை சொல்லித்தான் இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்திருக்கிறது.

ஏற்கனவே இருக்கும் புள்ளி விவரங்களை முறைப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது. அதனால் புள்ளி விவரங்களை முறைப்படுத்தி, இன்னும் கூடுதலாகவும் புள்ளி விவரங்களையும் சேகரித்து, உடனடியாக தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும். அதை தமிழக அரசு எளிதாக நிறைவேற்றலாம். அதனை உடனடியாக செய்யவேண்டும்.

நாடு தாங்காது

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வாதங்கள் திருப்தி அளிப்பதாகதான் இருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்புக்கும், இந்த பிரச்சினைக்கும் சம்பந்தம் கிடையாது. இதுதொடர்பாக எங்கள் கட்சியின் செயற்குழு சென்னையில் நாளை (இன்று) கூட இருக்கிறது. அதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அ.தி.மு.க. அவசரகோலமாக 10.5 சதவீதம் ஒதுக்கீட்டை வழங்கவில்லை.

சுங்கச்சாவடியே இருக்கக்கூடாது. கட்டுமானம் அரசாங்கத்தின் கடமை. அதில் மக்களுக்கு எந்த சுமையும் இருக்கக்கூடாது. இந்தியாவிலேயே அதிக சுங்கச்சாவடிகள் இருப்பது தமிழகத்தில் தான். தமிழகத்தில் 47 சுங்கச்சாவடிகளில், 28 சுங்கச்சாவடிகள் உடனடியாக மூடப்பட வேண்டும். ஏற்கனவே மக்கள் எரிபொருள் விலை உயர்வு, கொரோனா பாதிப்பு, பொருளாதார பாதிப்பு போன்ற சுமையில் இருக்கிறார்கள். இது கூடுதல் சுமையாக இருக்கும். இதற்காக தேவைப்பட்டால் பா.ம.க. போராடவும் செய்யும்.

மத்திய அரசு மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளவேண்டும். எரிபொருள், மருந்து விலை, உரங்கள் விலை, சுங்கக்கட்டணம் என ஒவ்வொரு விலையையும் உயர்த்தி கொண்டே வருகிறது. நாடு தாங்காது. மக்களும் எதிர்க்க தொடங்குவார்கள்.

கவர்னர் ஏன் தாமதிக்கிறார்?

‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவதில் கவர்னர் தாமதம் காட்டக்கூடாது. ‘நீட்’ என்பது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சினை. ‘நீட்’ சம்பந்தமாக இந்தியாவில் அதிக தற்கொலை சம்பவம் நடப்பது தமிழகத்தில் தான். ஆகவே கவர்னர் உடனடியாக ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்ப வேண்டும். கவர்னர் ஏன் தாமதிக்கிறார்?. இதில் அரசியல் பார்க்க வேண்டாம்.

‘நீட்’ தேர்வில் 108 மதிப்பெண் பெற்றவர் மருத்துவ படிப்பு படிக்கிறார். முன்பு 12-ம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெறவில்லை என்றால், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால் ‘நீட்’ தேர்வில் வெறும் 15 சதவீதம் மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பு ஒரு மாணவர் படிக்கிறார் என்றால், எந்த அளவுக்கு ‘நீட்’ தரம் கெட்டு போயிருக்கிறது என்று பார்க்க வேண்டும். பணம் இருந்தால் தான் ‘நீட்’ தேர்வுக்கு படிக்க முடியும். இதில் என்ன சமூக நீதி இருக்கிறது. இது வணிக மயமாக்குகிறது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story