மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பு சொத்து மீட்பு..!
முறைப்படி மாத வாடகை கட்டாத மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டது.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் செயல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான 4 ஆயிரத்து 920 சதுர அடி பரப்பளவு உள்ள மனை லட்சுமணன் என்பவருக்கு மாத வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மனையை விஜயா, ஆர்.சங்கர், அமாவாசை மற்றும் ராஜகோபால் ஆகிய 4 பேர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி குடியிருந்தும், கடைகளை கட்டி உள்வாடகைக்கு விட்டும் இருந்தனர்.
இந்தநிலையில், மேற்படி மனைக்கு நியாய வாடகை செலுத்தாததால் ஆர்.சங்கர், அமாவாசை ஆகியோர் ஆக்கிரமித்து இருந்த ஆயிரத்து 874 சதுர அடி மனை கடந்த 2018 ஜூலை மாதம் 30-ந் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதீனம் எடுக்கப்பட்டது. அதே நேரத்தில், விஜயா என்பவர் ஆணையர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவரின் மேல்முறையீடு கடந்த 2020 செப்டம்பர் 7-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், விஜயா என்பவர் ஆக்கிரமித்து இருந்த ஆயிரத்து 525 சதுர அடி பரப்பளவு உள்ள மனையில் இருந்த விஜயா ஸ்டோர்ஸ், கபாலீசுவரர் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஜி.கே.சலூன் ஆகிய 3 கடைகள் நேற்று பொருட்களுடன் பூட்டி சீலிடப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story