ஆம்னி வேன் மீது கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
வாடிப்பட்டி அருகே ஆம்னி வேன் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வாடிப்பட்டி,
கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27) இவரது மனைவி சுமதி (27). இருவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மணியஞ்சி அருகே உள்ள பூவாணி உறவினர் இல்லவிழாவில் கலந்து கொள்வதற்காக தாமோதரன் குடும்பத்துடன் காரில் சென்றுள்ளார்.
காரை தாமோதரன் ஓட்டி உள்ளார். காருக்குள் மனைவி சுமதி, மாமனார் செல்வராஜ்(55) மாமியார் இந்திரா (50) ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் வந்த கார் வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி எதிரே வந்த ஆம்னி கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் இடிபாடுக்குள் சிக்கிய தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், இது குறித்து அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
வாடிப்பட்டி அருகே நடந்த விபத்தில் ஐடி ஊழியர் தாமோதரன் உயிரிழந்த நிலையில், மனைவி சுமதி, மாமனார் செல்வராஜ், மாமியார் இந்திரா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த தாமோதரன் உடலை கைப்பற்றி போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story