காரைக்காலில் 16 பேரிடம் ரூ 70 லட்சம் 88 பவுன் நகைகள் மோசடி தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


காரைக்காலில் 16 பேரிடம் ரூ 70 லட்சம் 88 பவுன் நகைகள் மோசடி தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 April 2022 8:39 PM IST (Updated: 2 April 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் 16 பேரிடம் ரூ.70 லட்சம் பணம், 88 பவுன் தங்க நகைகள் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரைக்கால்
காரைக்காலில் 16 பேரிடம் ரூ.70 லட்சம் பணம், 88 பவுன் தங்க நகைகள் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் தொழில்

காரைக்கால் உமறுபுலவர் வீதியை சேர்ந்தவர் யூசுப். இவரது மகன் செல்லப்பா மொய்தீன் அப்துல்காதர் (வயது 46). இவர் தனது நண்பர் நாகூரை சேர்ந்த அப்துல்ரகுமான் (45), அவரது மனைவி ராஜாத்தி ஆயிஷா நாச்சியாள் (40) ஆகிய 3 பேரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதை உண்மை என்று நம்பிய காரைக்கால் காஜியார் வீதியை சேர்ந்த முகமது ஆரிப் மனைவி கமருன்நிசா அவர்களது உதவியை நாடினார். மேலும் அவர் தனது நண்பர்கள், உறவினர்கள் 9 பேரை முதலீடு செய்ய வைத்தார்.

3 பேருக்கு வலைவீச்சு

அந்த வகையில் கமருன்நிசா தலைமையில் 10 பேர் ரூ.55 லட்சம் மற்றும் 72 பவுன் நகையை கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட படி நிலமோ, லாபத்தில் பங்கோ கொடுக்கவில்லை. இதுகுறித்து அவர்களிடம் முறையிட்டபோது, 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கமருன்நிசாவை நம்பி பணம், நகை கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதுதொடர்பாக அவர் காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பா மொய்தீன் அப்துல்காதர் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை, பணம் மோசடி

இதேபோல் காரைக்கால் தம்பி மரைக்காயர் தெருவை சேர்ந்த ஜகாபர் சாதிக் மனைவி ஜனாத்துல் பர்லீன் (41) உள்பட 6 பேரிடமும் மேற்கண்ட 3 பேரும் சேர்ந்து ரூ.15 லட்சம் பணம், 16 பவுன் தங்க நகையை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரிலும் காரைக்கால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story