ஆசைக்கு இணங்க மறுத்ததால் தம்பி மனைவி, 2½ வயது குழந்தை எரித்துக்கொலை - தொழிலாளி வெறிச்செயல்


ஆசைக்கு இணங்க மறுத்ததால் தம்பி மனைவி, 2½ வயது குழந்தை எரித்துக்கொலை - தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 3 April 2022 6:50 AM IST (Updated: 3 April 2022 6:50 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்ததால் தம்பி மனைவி, 2½ வயது குழந்தையை எரித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா பெரியமலையூர் வலசை பகுதியை சேர்ந்தவர் நல்லபிச்சை. இவருடைய மகன்கள் கருப்பையா (வயது 30), சிவக்குமார் (26). இருவரும் கூலிவேலை பார்த்து வருகின்றனர். இதில் கருப்பையாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சிவக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலை (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு மலர்விழி என்ற 2½ வயது மகள் உள்ளாள். அஞ்சலை தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் அஞ்சலை தனது மகளுடன் ஆடு மேய்ப்பதற்காக பெரியமலையூர் வலசை அடுத்த மலைப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு விறகு வெட்ட வந்த சிவக்குமாரின் அண்ணன் கருப்பையா, காட்டுப்பகுதியில் தனது தம்பி மனைவி அஞ்சலை குழந்தையுடன் தனியாக இருப்பதை பார்த்துள்ளார். உடனே அவருடைய மனதில் கொடூர எண்ணம் தோன்றியது. அஞ்சலையை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார்.  

அதற்கு அஞ்சலை சம்மதிக்காமல் கருப்பையாவிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த கருப்பையா தான் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அஞ்சலை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். 

இதற்கிடையே அஞ்சலையை உயிருடன் விட்டால் குடும்பத்தினரிடம் தன்னை காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயந்த கருப்பையா, கர்ப்பிணி என்றும் பாராமல் அஞ்சலை, 2½ வயது பெண் குழந்தை ஆகியோரை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றார். சிறிது நேரத்தில் தாயும், மகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் விரைந்து சென்று தாய், மகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கருப்பையாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவி மற்றும் 2½ வயது பெண் குழந்தையை தொழிலாளி எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story