சென்னையின் 2-வது விமான நிலையம் அமைவது பன்னூரா? பரந்தூரா? தமிழக அரசு தீவிர ஆலோசனை
சென்னையில் 2-வது விமான நிலையத்துக்கு மத்திய அரசு தேர்வு செய்துள்ள பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் எதை தேர்வு செய்வது? என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
சென்னை,
சென்னை விமான நிலையம் பன்னாட்டு முனையத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்களும், உள்நாட்டு முனையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. விமான போக்குவரத்து விரைவான பயணமாக இருப்பதால், இதில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதேவேளையில் சென்னையின் 2-வது விமான நிலையத்தை உருவாக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
2-வது விமானநிலையத்துக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள பன்னூர், பரந்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை அளித்தது.
இந்த 4 இடங்களிலும் விமான போக்குவரத்து ஆணைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து வசதி, தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு 2-வது விமான நிலையம் அமைக்க பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்களை விமான போக்குவரத்து ஆணையம் இறுதி செய்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையை விமான போக்குவரத்து ஆணையம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துக்கு அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. விரைவில் 2-வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை இறுதி செய்து தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் புதிய விமான நிலையத்துக்கான கட்டுமான ஒப்பந்தங்கள் விடப்பட்டு பணிகள் தொடங்கும். 7 முதல் 10 ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்து 2-வது விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story