தொழிலாளி மாயமான வழக்கில் திருப்பம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு, நண்பரே கொலை செய்தது அம்பலம்


தொழிலாளி மாயமான வழக்கில் திருப்பம்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு, நண்பரே கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 3 April 2022 11:40 AM IST (Updated: 3 April 2022 11:40 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி மாயமான வழக்கில் 6 மாதத்திற்கு பிறகு நண்பர் கைது செய்யப்பட்டார். மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிடாததால் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 43). தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது நண்பரை பார்க்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பாண்டியனின் சகோதரர் குமார் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இது தொடர்பாக பாண்டியனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பாண்டியனின் நெருங்கிய நண்பரான அதே ஊரைச்சேர்ந்த வேல்முருகன் (40) என்பவர் மாயமானார். எனவே வேல்முருகனையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த வேல்முருகனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாண்டியனை அவர் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து, திருநாவலூருக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது வேல்முருகன் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனது மனைவிக்கும், பாண்டியனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த நான் பாண்டியனை கண்டித்தேன். இருப்பினும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

எனவே பாண்டியனை எனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு அழைத்து சென்று, எனது மனைவியிடம் இனி எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து பாண்டியன் முகத்தில் தூவினேன்.

பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்தேன். தொடர்ந்து கொலையை மறைக்கும் வகையில் பாண்டியனின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி குழிதோண்டி புதைத்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல் பெங்களூருவுக்கு சென்று கூலி வேலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட பாண்டியனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு செய்யப்பட்டது. பின்னர் அங்கேயே பாண்டியனின் உடல் புதைக்கப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story