வழிப்பறி கொள்ளையனை கைது செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - ‘தீரன்’ பட பாணியில் மதுரையில் சம்பவம்


வழிப்பறி கொள்ளையனை கைது செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு - ‘தீரன்’ பட பாணியில் மதுரையில் சம்பவம்
x
தினத்தந்தி 3 April 2022 8:19 PM IST (Updated: 3 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட பாணியில் வழிப்பறி கொள்ளையனை பெரும் சிரமத்திற்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற முதியவரிடம், ஒரு பெண் உள்பட 2 பேர் மணிபர்சை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அந்த முதியவர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த விசாரணையின் மூலம், பேருந்து நிலையத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட உதயசெல்வம் என்ற நபர் மதுரை பூலாம்பட்டி கிராமத்தில், பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டிற்குள் பதுங்கி இருந்த உதயசெல்வத்தை கைது செய்ய முயன்றனர். அப்போது ஊர்மக்கள் திரண்டு வந்து போலீசாரை தடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கடும் சிரமத்திற்குப் பிறகு உதயசெல்வத்தை போலீசார் கைது செய்தனர். 

உதயசெல்வத்திற்கு உதவியாக இருந்த மணிமாலா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேர் மீதும் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போல், இன்று நடைபெற்ற இந்த சம்பவம் மதுரை சுற்றுவட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story