வினாத்தாள் கசிவு: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


வினாத்தாள் கசிவு: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 3 April 2022 10:20 PM IST (Updated: 3 April 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

12-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தமிழகத்தில் நடைபெற்று வரும் 12-ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில், நாளை நடைபெறவுள்ள கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் இன்று மதியமே வெளியாகி இருக்கிறது. தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த இரு வகை வினாத்தாள்களும் கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி இருந்தன. அதற்காக ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்வதற்கு யார் காரணம்? அடுத்தடுத்து வினாத்தாள் கசிவதால், தமிழக அரசின் தேர்வு முறை மீதே மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடும்.

தமிழகத்தில் மருத்துவம் தவிர்த்த பிற படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடப்பதால், இதை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story