தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்: முதல்-அமைச்சர் 10-ந் தேதி செங்கல்பட்டில் பேசுகிறார்


தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்: முதல்-அமைச்சர் 10-ந் தேதி செங்கல்பட்டில் பேசுகிறார்
x
தினத்தந்தி 4 April 2022 3:38 AM IST (Updated: 4 April 2022 3:38 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில் தமிழக அரசின் ‘பட்ஜெட்’ விளக்கம், உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுகூட்டங்கள் நடைபெற உள்ளன. 10-ந் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி பேசுகிறார்.

சென்னை,

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த மாதம் 18-ந் தேதி அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த, அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர், மகளிர், கழனியில் பாடுபடும் உழவர், ஆலையில் உழைக்கும் தொழிலாளி, வேலைவாய்ப்பில்லாதோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் நிதிநிலை அறிக்கையின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையிலும், நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வரலாறு காணாத பெருவெற்றியை தி.மு.க.வுக்கு வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தமிழகத்தில் உள்ள 77 கழக மாவட்டங்களில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

இடங்கள், பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் பட்டியல் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட செயலாளர் - பொறுப்பளர்கள் தலைமையிலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையிலும் நடைபெறும் இப்பொதுக்கூட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டும்.

மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

அதன்படி 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். 9-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம்- அமைச்சர் துரைமுருகன், கும்பகோணம்- டி.ஆர்.பாலு எம்.பி., திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்- கே.என்.நேரு, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்- அமைச்சர் ஐ.பெரியசாமி, சென்னை மாதவரம்- அமைச்சர் பொன்முடி, பொன்னேரி - ஆர்.எஸ்.பாரதி, சென்னை ராயபுரம்- கனிமொழி எம்.பி., மயிலாப்பூர்- உதயநிதி ஸ்டாலின், எம்.எம்.அப்துல்லா எம்.பி., சேப்பாக்கம்- டாக்டர் கனிமொழி சோமு, சோழிங்கநல்லூர்- தயாநிதிமாறன் எம்.பி., வில்லிவாக்கம்- கடலூர் புகழேந்தி, பூந்தமல்லி- சேலம் சுஜாதா, காஞ்சீபுரம்- கவிஞர் மனுஷ்யபுத்திரன், கள்ளக்குறிச்சி- அமைச்சர் எ.வ.வேலு, திருத்தணி- எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., கரூர்- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ராணிப்பேட்டை- தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., நாமக்கல்- திருச்சி சிவா, திருப்பூர்- திண்டுக்கல் லியோனி, வேலூர்- வாகை சந்திரசேகர், நாங்குநேரி- அமைச்சர் ராஜகண்ணப்பன், நாகப்பட்டினம்- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story