சொத்து வரி அதிகரிப்பால் அரசுக்கு கூடுதலாக ரூ.1,750 கோடி வருவாய்...!


சொத்து வரி அதிகரிப்பால் அரசுக்கு கூடுதலாக ரூ.1,750 கோடி வருவாய்...!
x
தினத்தந்தி 4 April 2022 4:48 AM IST (Updated: 4 April 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 83 சதவீத வீடுகளுக்கு 25 முதல் 50 சதவீதம் மட்டுமே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட சொத்து வரி மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,750 கோடி வருவாய் கிடைக்கும்.

சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை தமிழக அரசு கடந்த 1-ந்தேதி முதல் உயர்த்தியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் உள்ள 600 சதுர அடிக்கும் குறைவான வீடுகளுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 600 முதல் 1,200 சதுர அடி உள்ள வீடுகளுக்கு 75 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு 100 சதவீதமும், 1,801 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 150 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் உள்ள 600 சதுர அடி மற்றும் 1,200 சதுர அடி வீடுகளுக்கு 50 சதவீதமும், 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு 75 சதவீதமும், 1,801 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 600 சதுர அடி வீட்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.810 சொத்து வரி விதிக்கப்பட்டது. அது தற்போது ரூ.1,215 (50 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. இந்த வரி மும்பையில் ரூ.2 ஆயிரத்து 157 ஆகவும், பெங்களூருவில் ரூ.3 ஆயிரத்து 464 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3 ஆயிரத்து 510 ஆகவும் இருக்கிறது. சொத்து வரி விதிப்பு திருத்தியமைக்கப்பட்ட பின்னர் சென்னையில் 600 சதுர அடி வீட்டுக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 860 சொத்து வரியாக செலுத்தவேண்டியது வரும்.

ஆனால் இது பெங்களூருவில் ரூ.8 ஆயிரத்து 660 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.15 ஆயிரத்து 984 ஆகவும், புனேவில் ரூ.17 ஆயிரத்து 112 ஆகவும், மும்பையில் ரூ.84 ஆயிரத்து 583 ஆகவும் உள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் 2008-ம் ஆண்டு சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் வருவாய் 2010-11-ம் ஆண்டு 60 சதவீதம் ஆகவும், 2015-16-ம் ஆண்டு 51 சதவீதம் ஆகவும் இருந்தது. இது 2020-21-ம் ஆண்டில் 43 சதவீதம் ஆக குறைந்துவிட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சியின் வருவாய் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. நாட்டிலேயே, சென்னையில்தான் சொத்து வரி மிகவும் குறைவாக வசூலிக்கப்படுகிறது. ஆலந்தூர் மண்டலத்தில் 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.320 சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது தற்போது ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. 1,201 சதுர அடி வீட்டுக்கு ரூ.825-ல் இருந்து ரூ.1,444 ஆக உயர்ந்துள்ளது.

மாதவரம் மண்டலத்தில் 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.220-ல் இருந்து ரூ.275 ஆகவும், 1,201 சதுர அடி வீட்டுக்கு ரூ.1,485-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 970 ஆகவும் சொத்து வரி உயர்ந்துள்ளது. அண்ணாநகர் மண்டலத்தில் 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.307-ல் இருந்து ரூ.461 ஆகவும், 1,201 சதுர அடி வீட்டுக்கு ரூ.1,485-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 970 ஆகவும் சொத்து வரி உயர்ந்துள்ளது. அடையாறு மண்டலத்தில் 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.308-ல் இருந்து ரூ.462 ஆகவும், 1,201 சதுர அடி வீட்டுக்கு ரூ.1,461-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 922 ஆகவும் சொத்து வரி உயர்ந்துள்ளது.

கட்டுமான திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு அதிகரிக்கும் செலவினத்துக்காக சென்னை மாநகராட்சி கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.19 ஆயிரத்து 988 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 10.42 சதவீதம் அளவுக்கு கடன் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு சொத்து வரியை மாற்றியமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அது 2019-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. சொத்து வரியை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சந்தை விலை, பணவீக்கம், உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி விகிதம், செலவு பணவீக்க விகிதம் ஆகியவற்றை ஆராய்ந்தது. அதில், 1998-ல் இருந்து 2022 வரை ஒட்டுமொத்த விலை குறியீடு 2.98 மடங்கு உயர்ந்துள்ளது.

இது, 2008-ல் இருந்து 2022 வரை மட்டும் 1.79 மடங்கு உயர்ந்துள்ளது. மாநிலத்தின் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி விகிதம் 5.2 மடங்கு அதாவது, ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 272 கோடியில் இருந்து 2022-ம் ஆண்டு ரூ.21 லட்சத்து 79 ஆயிரத்து 655 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதங்களை அடிப்படையாக வைத்தே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 77 லட்சத்து 87 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் 25 சதவீதம் சொத்து வரி உயர்வு 45.54 லட்சம் வீடுகளுக்கும், 50 சதவீதம் சொத்து வரி உயர்வு 19.23 லட்சம் வீடுகளுக்கும் விதிக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் முதல் 50 சதவீதம் சொத்து வரி உயர்வு தமிழகத்தில் உள்ள 83 சதவீத வீடுகளுக்கு விதிக்கப்படுகிறது.

100 சதவீதம் மற்றும் 150 சதவீத வரி விதிப்பில் சுமார் 7 சதவீத வீடுகளே வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் அரசுக்கு ரூ.1,750 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் 11 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ.850 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயித்து, ரூ.670 கோடி வசூலிக்கப்படுகிறது. சுமார் 70 சதவீதம் பேர் மட்டுமே சரியான நேரத்தில் சொத்து வரி செலுத்துகிறார்கள். தற்போது ரூ.300 கோடி அளவுக்கு சொத்து வரி பாக்கி இருக்கிறது. சொத்து வரி திருத்தி அமைக்கப்பட்டதையடுத்து சென்னை மாநகராட்சி ஆண்டுக்கு ரூ.1,500 கோடி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் ரூ.1,100 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரூ.430 கோடி கூடுதலாக வசூலாகும் என்று தெரிகிறது.

Next Story