ரியல் எஸ்டேட்டில் இரட்டிப்பு லாபம் என கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த கும்பல்


ரியல் எஸ்டேட்டில் இரட்டிப்பு லாபம் என கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த கும்பல்
x
தினத்தந்தி 4 April 2022 9:29 AM IST (Updated: 4 April 2022 9:29 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் ரியல் எஸ்டேட்டில் இரட்டிப்பு லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்:

புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்தவர் கமருன்னிசா. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பா, அப்துல் ரஹ்மான் மற்றும் ராஜாத்தி ஆகிய மூவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறி அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில் கமருன்னிசாவிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யுமாறும் அதன் மூலம் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய கமருன்னிசா அவர்களிடம்  52 லட்சம் ரொக்கம் மற்றும் 72 சவரன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து பணத்தை பெற்றுக் கொண்ட மூவரையும் பின்னர் தொடர்புகொண்ட போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. பின்னர் தான் ஏமாற்றபட்டதை அறிந்த கமருன்னிசா மோசடியில் ஈடுபட்ட மூவர் மீதும் புகார் அளித்தார்.

இதே போல் காரைக்காலை சேர்ந்த ஜன்னத்துல் பர்லீன் மற்றும் அவரது நண்பர்களும் செல்லப்பாவிடம் 15 லட்சம் பணம் மற்றும் 16 பவுன் நகைகளை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தொடர் மோசடியில் ஈடுபட்ட செல்லப்பாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் செல்லப்பா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story