பஸ்சின் பின் இருக்கையில் இருந்து பாலியல் சீண்டல்; குண்டூசியால் குத்தி வீடியோ எடுத்த பெண் வக்கீல்


பஸ்சின் பின் இருக்கையில் இருந்து பாலியல் சீண்டல்; குண்டூசியால் குத்தி வீடியோ எடுத்த பெண் வக்கீல்
x
தினத்தந்தி 4 April 2022 1:18 PM IST (Updated: 4 April 2022 1:18 PM IST)
t-max-icont-min-icon

பஸ்சின் பின் இருக்கையில் இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பெண் வக்கில் குண்டூசியால் குத்தி வீடியோ எடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு 28 வயது இளம்பெண் வக்கீல் தனது தாயுடன் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்துக்கு அரசு பஸ்சில் சென்றார்.

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் இருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின் இருக்கையில் இருந்தபடி பெண் வக்கீல் மீது கை வைத்து தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இருக்கைக்கு அடியில் கையை நீண்டி அந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த பெண் வக்கீல்தான் வைத்திருந்த குண்டூசியை எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் கையை குத்தினார். மேலும், அந்த நபரின் கை தனது இருக்கைக்குள் நுழைவதையும் அதை குண்டூசியால் குத்துவதையும் அந்த பெண் வக்கீல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும், இது பற்றி பஸ் டிரைவரிடம் முறையிட்டுள்ளார். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் போன் செய்து தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி புகார் செய்தார். 

இதையடுத்து, வானகரம் அருகே சென்றுகொண்டிருந்த பஸ்சை டிரைவர் அங்கேயே நிறுத்தினார். உடனடியாக கோயம்பேடு உதவி கமி‌ஷனர் தலைமையிலான போலீசார் பஸ் நிறுத்தப்பட்டிருந்த வானரகம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பெண் வக்கீல் அளித்த புகாரின் பேரில் அந்த நபரிடம் காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரது பெயர் ராகவன் (40) கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பெண் வக்கீல் தான் பஸ்சில் எடுத்த குண்டூசி வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராகவனின் முகத்தையும் பதிவு செய்து இவர்தான் அந்த நபர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண் வக்கீலின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர். அவருக்கு ஆதரவு பெருகி உள்ளது.

Next Story