தேனி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ மரங்கள் எரிந்து நாசம் வன விலங்குகள் பாதிப்பு


தேனி வனப்பகுதியில்  பயங்கர காட்டுத்தீ மரங்கள் எரிந்து நாசம் வன விலங்குகள் பாதிப்பு
x
தினத்தந்தி 4 April 2022 9:05 PM IST (Updated: 4 April 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

தேனி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ பற்றி எரிகிறது. இதனால், ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

தேனி:

வனப்பகுதியில் தீ
தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில், கடந்த ஒரு மாத காலமாக ஆங்காங்கே காட்டுத்தீ பற்றி எரியும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக போடி அருகே குரங்கணி, அணைக்கரைப்பட்டி, தேனி அருகே மரக்காமலை, பெரியகுளம் அருகே சோத்துப்பாறை மற்றும் கம்பம், தேவாரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
இந்தநிலையில், தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதி மற்றும் அருகாமையில் உள்ள வனப்பகுதிகளில் நேற்று பகலில் தீப்பற்றியது. இந்த தீ மளமளவென வனப்பகுதியில் பரவியது. இரவு நேரத்தில், அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது.

வனவிலங்குகள் பாதிப்பு
இந்த வனப்பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டெருமைகள், மான் போன்ற வன விலங்குகளும், பாம்புகள், பூச்சி இனங்களும் உள்ளன. இவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
மேலும் வனவிலங்குகள் தீயில் கருகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதேபோல் வனப்பகுதியில் உள்ள அபூர்வ மூலிகைகள் மற்றும் பழமையான மரங்களும் காட்டுத்தீயில் எரிந்து நாசமாகின. 
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கட்டுக்குள் அடங்காமல் வேகமாக பரவி வருகிறது. இதனால் காட்டுத்தீயை அணைக்க போதிய உபகரணங்கள் இன்றியும், ஆட்கள் இன்றியும் வனத்துறையினர் பரிதவித்து வருகின்றனர்.

---
படம்

Next Story