முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி வந்தார்
கொழுவேரி சமத்துவபுரம் திறப்பு விழாவுக்காக புதுச்சேரிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிமேடு எல்லையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கொழுவேரி சமத்துவபுரம் திறப்பு விழாவுக்காக புதுச்சேரிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிமேடு எல்லையில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார். மேலும் சமத்துவபுர வளாகத்தில் அங்கன்வாடி மைய வளாகம், நூலகம் உள்ளிட்டவை அமைக்க அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து ஒழிந்தியாப்பட்டு ஊராட்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.42 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
அதன்பின் திண்டிவனம் வட்டம் பெலாக்குப்பம் சிப்காட் தொழில்பூங்கா வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தொழிற்சாலைக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
தி.மு.க.வினர் வரவேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இ்ன்று இரவு 9.15 மணிக்கு புதுச்சேரிக்கு காரில் வந்தார்.
அப்போது புதுச்சேரி தி.மு.க. சார்பில் கோரிமேடு எல்லையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா, அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் துணை அமைப்பாளர்கள் செந்தில்குமார், ஏ.கே.குமார், சண்.குமாரவேல் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
பலத்த பாதுகாப்பு
அதைத்தொடர்ந்து புதுவை ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் ஓட்டலில் தங்கி இருந்து விட்டு நாளை அங்கிருந்து புறப்பட்டு சமத்துவபுரம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி மாநில எல்லையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். அவர் தங்கி இருந்த ஓட்டலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story