சமையல் கியாஸ் விலை உயர்வால் மண் அடுப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு..!
சமையல் கியாஸ் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் மண் அடுப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. தற்போது குக்கிராமங்களிலும் கியாஸ் அடுப்புகள் அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளது. இதுதவிர மின்சார அடுப்பு, சோலார் அடுப்பு, சாண எரிவாயு அடுப்பு என பலவும் பயன்பாட்டில் உள்ளது.
இந்தநிலையில் சமையல் கியாஸ் விலை ஆயிரம் ரூபாயை தொட்டதால் அதிர்ச்சியடைந்த பலரும் மீண்டும் மண் அடுப்புகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
ஆரம்ப காலங்களில் சமையல் கட்டு என்பது வீட்டிலிருந்து சற்று தள்ளியே அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது விறகு எரியும்போது ஏற்படும் புகை மூட்டமாகும். மண் அடுப்பைக் கைவிட்டு பலரும் மண்எண்ணெய் திரிஅடுப்பு, மண்எண்ணெய் பம்ப் அடுப்பு, கியாஸ் அடுப்பு என்று அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்ததற்கு விறகு சேமிப்பதில் உள்ள சிரமம் மட்டுமல்லாமல் இந்த புகை மூட்டமும் ஒரு காரணமாகும்.
தற்போது வருமானத்தின் ஒரு பகுதியை கியாஸ் தின்று விடுவதால் மீண்டும் கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் விறகுகளை சேகரித்து மண் அடுப்புகளை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து மண் அடுப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
‘மண் அடுப்புகளில் ஒரு பாத்திரம் வைத்து சமைக்கும் ஒற்றை அடுப்பு, இரண்டு பாத்திரங்களை வைத்து சமைக்கும் வகையில் கொடி அடுப்புடன் கூடிய இரட்டை அடுப்பு, பல பாத்திரங்களை வைத்து ஒரே நேரத்தில் சமைக்கும் வகையிலான கோட்டை அடுப்பு என்று பல வகைகள் உண்டு. இதுதவிர கரியை உபயோகித்து சமைக்கும் வகையிலான குமுட்டி அடுப்பு என்று ஒருவகை உண்டு. கியாஸ் அடுப்புகள் பயன்பாடு அதிகரித்த பிறகு பெரும்பாலும் மண் அடுப்பு உற்பத்தியையே நிறுத்தி விட்டோம்.
ஆனால் சமீப காலமாக மீண்டும் மண் அடுப்புக்கு மவுசு கூடியுள்ளது. கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் சீமைக்கருவேல மரங்களின் விறகுகளைப் பயன்படுத்தி செலவேயில்லாமல் பலரும் சமைக்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் மண் அடுப்புகளில் புகை போக்கியுடன் கூடிய வடிவமைப்பின் மூலம் புகையில்லாமல் சமைக்க முடியும்.
மேலும் மண் பானைகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மண் பானைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. எளிதாக தண்ணீர் பிடிக்கும் வகையில் பைப் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் மண் பானைகளுக்கும் கோடை காலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இதுதவிர திருவிழாக்களுக்கான சுடு மண் பொம்மைகள், மண் விளக்குகள் என தற்போது மண் பாண்டத் தொழிலில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது'
Related Tags :
Next Story