4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!


4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை..!
x
தினத்தந்தி 5 April 2022 1:21 AM IST (Updated: 5 April 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராம்ஜி நகரை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் 2 பேரை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து  நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (60) என்பவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் ராமதாஸ் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல் 13 வயது சிறுமிகள் 2 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராமதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளின் விசாரணையும் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தனித்தனியே நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட கூலித்தொழிலாளி ராமதாசுக்கு வெவ்வேறு பிரிவுகளில் 108 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.48 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. 

இருப்பினும் தீர்ப்பில் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதால், 20 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story