பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா நேற்று நடந்தது. இதில் 1,098 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா நேற்று நடந்தது. இதில் 1,098 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது.
பத்திரகாளியம்மன் கோவில்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு மீனபரணி தூக்க திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10-ம் நாள் திருவிழாவான நேற்று பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
தூக்க நேர்ச்சை என்பது, திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் அம்மனை வேண்டி குழந்தை பெற்ற பிறகு அந்த குழந்தைக்கு நேர்ச்சை நிறைவேற்றுவது வழக்கம். அதுபோல குழந்தை நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளோடு வாழவும் பலர் அம்மனை வேண்டிக் கொள்வார்கள். அதை நிறைவேற்றுவதற்காக ஆண்டுதோறும் இந்த தூக்க திருவிழா நிகழ்ச்சி ஏப்ரல் மாதத்தில் வரும் மீன பரணி நாளில் நடத்தப்படுகிறது.
தூக்க நேர்ச்சை
தூக்கநேர்ச்சை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக தூக்கக்காரர்கள் நீராடிவிட்டு கோவிலுக்கு வந்து கோவிலை சுற்றி முட்டுகுத்தி நமஸ்காரம் செய்தனர். அதைத்தொடர்ந்து வெளியே அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் இரு அம்மன்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்க தேரில் பொருத்தியிருந்த இரண்டு வில்லிலும் நான்கு தூக்கக்காரர்கள் கையில் வாள் மற்றும் பரிவட்டத்துடன் ஏறி கோவிலை சுற்றி வலம் வந்து தூக்கத்தை தொடங்கினார்கள். காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் தொடங்கியது.
1,098 குழந்தைகளுக்கு நிறைவேற்றம்
அதைத்தொடர்ந்து 1,098 பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வரிசையாக நடத்தப்பட்டது. இந்த நேர்ச்சையானது நான்கு வில்லில் நான்கு குழந்தைகளுடன் தூக்கக் காரர்கள் 48 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளை சுமந்து கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வந்து நேர்ச்சையை நிறைவேற்றினர். இதே போல் 282 முறை தூக்கத்தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த கோவிலில் தூக்க நேர்ச்சை நிவர்த்தி செய்ய பட்டு வரப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 1,098 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. நேற்று காலை தொடங்கிய இந்த நேர்ச்சையானது விடிய,விடிய நடந்தது.
திரளான பக்தர்கள்
இந்த விழாவை காண தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர் அவர்கள் அனைவரும் எளிதில் வந்து செல்ல ஏதுவாக தமிழகம் மற்றும் கேரள அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவில் வளாகத்தினுள் இலவச மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது.
திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்ததால் கோவில் முன்பாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் பொது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர் பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, செயலாளர் மோகன்குமார் துணைத்தலைவர் சதி குமாரன் நாயர், இணைச்செயலாளர் பிஜூகுமார் பிரதிநிதி சபை உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீீகண்டன் தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதி குமாரன் நாயர் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story