ஈரோடு: இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் பரபரப்பு....!


ஈரோடு: இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் பரபரப்பு....!
x
தினத்தந்தி 5 April 2022 10:00 AM IST (Updated: 5 April 2022 9:52 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீர் என்று உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டி.என்.பாளையம், 

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே துறையம்பாளையத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி மூர்த்தி (வயது 55). இவர் கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 31-ஆம் தேதி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சுமார் 55 வயது கொண்ட ஆண் சடலம் கிடப்பதாக கார்த்திக்கிற்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்து உள்ளது.

அதைத் தொடர்ந்து கார்த்திக் சத்தியமங்கலம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் இருந்தாலும் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தை தான் என்று முடிவு செய்து உள்ளார். 

உடனே சடலத்தை எடுத்துக்கொண்டு துறையம்பாளையம் கொண்டு சென்று உரிய முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்.

இந்நிலையில் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பங்களாப்புதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். 

இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்த தகவல் அப்பகுதியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அடக்கம் செய்யப்பட்ட அந்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளதால் அடையாளம் தெரியாத அந்த நபரின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story