சொத்துவரி உயர்வை வாபஸ் பெறக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


சொத்துவரி உயர்வை வாபஸ் பெறக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 3:33 AM IST (Updated: 6 April 2022 3:33 AM IST)
t-max-icont-min-icon

சொத்துவரி உயர்வை வாபஸ் பெறக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது. சொத்துவரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னை மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச்செயலாளர்கள் விருகை வி.என்.ரவி, நா.பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், பி.சத்யா, கே.பி.கந்தன், எம்.கே.அசோக் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசியதாவது:-

‘தி.மு.க. அரசை மக்கள் தண்டிப்பார்கள்’

சொத்துவரியை உயர்த்தவே மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்திருந்தது. ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்கவிடப்படுவது போல, இப்போது சொத்துவரியை 25 முதல் 150 சதவீதம் உயர்த்தி ஏழை-நடுத்தர மக்களின் கோபத்தை இந்த அரசு பெற்றிருக்கிறது. கொரோனா பாதிப்பு இன்னும் ஓயாத நிலையில் மக்களை பாதிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை தி.மு.க. அரசு கையாள தொடங்கி இருக்கிறது.

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவோம், முதியோர் ஓய்வூதிய திட்டம் உயர்த்துவோம், கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவோம் என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக தி.மு.க. தந்தது. அதெல்லாம் என்ன ஆச்சு? சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என கபடவேடம் போடும், இரட்டை வேடம் போடும் தி.மு.க. அரசை மக்கள் தற்போது நன்கு புரிந்துகொண்டார்கள். இரட்டை வேடம் போடும் தி.மு.க. அரசை மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்.

‘பதில் சொல்லியே ஆகவேண்டும்’

கொதிப்படைந்து போயுள்ள மக்களின் கண்ணீர், தி.மு.க. ஆட்சியை அதலபாதாளத்தில் கொண்டு செல்வது நிச்சயம். இந்த மக்கள் விரோத போக்கு நடவடிக்கைகளுக்காக தி.மு.க. அரசு நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆட்சியை பிடிக்கும் முன்னர் ஒரே கையெழுத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள்.

வரும் காலம், தமிழகத்தில் யார் ஆட்சி சிறந்தது? என்று மக்கள் எடைபோட்டு பார்த்து முடிவு செய்யும் காலமாக இருக்கும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி உயர்த்தியபோது, இது கூடாது என்று முதலில் கொடி பிடித்து போராடியவர் மு.க.ஸ்டாலின்தான். அதனைத்தொடர்ந்து மக்களின் வேண்டுகோளை ஏற்று, அந்த அறிவிப்பு ‘வாபஸ்’ பெறப்பட்டது. அப்போது மக்கள் செலுத்திய வரிப்பணத்தை திரும்ப செலுத்தவேண்டும் என்று கூக்குரல் எழுப்பினார் மு.க.ஸ்டாலின். இப்போது அப்படியே மாறி போய்விட்டது. ஆட்சியில் இருக்கும்போது ஒன்று, இல்லாதபோது ஒன்று என இரட்டை வேடம் போடுகிறார், மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் வேலையே இதுதானே...

திரும்பப்பெற வேண்டும்

எனவே தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதேபோல தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி, சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் எம்.ஏ.சேவியர், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன், நடிகை விந்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

அப்போது அவர், ‘உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட்ட மக்களுக்கு, தி.மு.க. சொத்து வரியை கடுமையாக உயர்த்தி வேட்டு வைத்து விட்டு மத்திய அரசு மீது வீண்பழி போடுகிறது’ என்று குற்றம்சாட்டினார்.

Next Story