“சொத்து வரியை உயர்த்துங்கள் என்று மத்திய அரசு சொல்லவே இல்லை” - எடப்பாடி பழனிசாமி பேட்டி


“சொத்து வரியை உயர்த்துங்கள் என்று மத்திய அரசு சொல்லவே இல்லை” - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 7 April 2022 4:39 AM IST (Updated: 7 April 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

"சொத்து வரியை உயர்த்துங்கள் என்று மத்திய அரசு சொல்லவே இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கண்டனம்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மக்கள் விரோத ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சொத்து வரியை 600 சதுர அடிக்கு 25 சதவீதம், பிறகு 50, 75, 150 சதவீதம் என்று மக்களுக்கு அதிர்ச்சி தரும் அளவுக்கு கடுமையாக உயர்த்தி இருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது.

மக்கள் மீது இந்த அரசு பெரிய சுமையைச் சுமத்துகிறது. ஆகவே, உடனடியாக உயர்த்தப்பட்ட சொத்து வரியைத் திரும்பப் பெறவேண்டும் என்று அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். ஆனால், மத்திய அரசு சொத்துவரியை உயர்த்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது, அதனால் நாங்கள் உயர்த்தினோம் என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

வெளிநடப்பு செய்தது ஏன்?

மத்திய அரசு, சொத்து வரிக்கான குறைந்தபட்ச அளவினை ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், மற்றும் வரி வசூலிப்பதற்கான பொருத்தமான செயல்பாட்டுடன் கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றுதான் கூறியுள்ளது. எந்த இடத்திலும் சொத்து வரி உயர்த்தவேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிடவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில், அதுவும் உள்ளாட்சித் தேர்தல் முடியும்வரை காத்திருந்து, வாக்களித்த மக்களுக்குப் பரிசாகச் சொத்துவரியை உயர்த்தியுள்ளார்கள்.

மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் நிலையை உணர்ந்து உயர்த்தப்பட்ட சொத்துவரியைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்திருக்கின்றோம். நாங்கள் வைத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ஏற்காத காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

டெல்லியில் குறைவு

கேள்வி:- மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் வரி குறைவு என்று தெரிவித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?.

பதில்:- டெல்லி குறித்து அவர் குறிப்பிடவில்லை. மும்பை, கொல்கத்தா, நாசிக் போன்ற நகரங்களைத்தான் குறிப்பிட்டார். டெல்லியில் சொத்துவரி மிக மிகக் குறைவு. சில விதிமுறைகளை விதித்துள்ளார்கள். சொத்துவரியைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் 15 சதவீதம் குறைத்துக் கொள்கிறார்கள். அதோடு மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு 30 சதவீதம் வீட்டு வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளார்கள். எனவே டெல்லியில் வீட்டு வரி மிக மிகக் குறைவு. அதனை அமைச்சர் கோடிட்டுக் காட்டவில்லை. மற்ற நகரத்தைத்தான் குறிப்பிட்டார்.

உண்மையான அரசு எது?

கேள்வி:- சொத்துவரியை உயர்த்தவில்லை என்றால் உள்ளாட்சிகளுக்கு நிதி கிடைக்காது என்று அமைச்சர் குறிப்பிடுகிறாரே?

பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே 2018-ம் ஆண்டு சொத்துவரியை உயர்த்தவேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்தது. அப்போதுகூட நாங்கள் குழுவை அமைத்து மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகச் சொத்துவரியை நாங்கள் உயர்த்தவில்லை. எனவே மக்களின் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய அரசுதான் உண்மையான அரசு. உண்மையான அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டது. இன்றைக்கு மக்கள் விரோத ஆட்சியிலே சொத்துவரி உயர்த்தியது கண்டனத்திற்குரியது. மக்கள் மீது இந்த அரசு மிகப்பெரிய சுமையைச் சுமத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story