தொடர்ந்து ஏறுமுகம்: பெட்ரோல்-டீசல் விலை 14-வது நாளாக உயர்வு


தொடர்ந்து ஏறுமுகம்: பெட்ரோல்-டீசல் விலை 14-வது நாளாக உயர்வு
x
தினத்தந்தி 7 April 2022 5:18 AM IST (Updated: 7 April 2022 5:18 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. நேற்றும் 14-வது நாளாக அதன் விலை லிட்டருக்கு 76 காசு அதிகரித்திருந்தது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் (மார்ச்) 22-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்பட்டு வருகிறது. இடையில் கடந்த மாதம் 24-ந்தேதியும், கடந்த 1-ந்தேதியும் மட்டும் விலை மாற்றம் இல்லாமல் இருந்து, மற்ற அனைத்து நாட்களிலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் நேற்று 14-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து இருந்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, பெட்ரோல் நேற்று லிட்டருக்கு 76 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 110 ரூபாய் 85 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 100 ரூபாய் 94 காசுக்கு விற்பனை ஆனது.

இதில் பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. டீசல் விலையை பொறுத்தவரையில், இன்னும் ஓரிரு நாட்கள் விலை அதிகரித்தால், புதிய உச்சத்தை தொட்டுவிடும் என்றே கூறப்படுகிறது.

மின்சார வாகன விற்பனை அதிகரிப்பு

கடந்த 14 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாய் 45 காசும், டீசல் லிட்டருக்கு 9 ரூபாய் 51 காசும் விலை அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் பல்வேறு பொருட்களில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், என்னென்ன பொருட்களின் விலை அதிகரிக்கப் போகிறதோ? என பொதுமக்களும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எண்ணி வாகன ஓட்டிகளும் கவலை அடைந்துள்ளனர்.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால், இந்தியாவில் பலர் மின்சார வாகனத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். கடந்த 2019-20-ம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில், 2021-22-ம் ஆண்டில் மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்களின் விற்பனை ‘கிடுகிடு' வென அதிகரித்துள்ளது. உதாரணமாக, கடந்த 2019-20-ம் ஆண்டில் 24 ஆயிரத்து 843 மின்சார மோட்டார் சைக்கிள்கள் விற்பனையான நிலையில், அது 2021-22-ம் ஆண்டில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 338 வாகனங்கள் விற்பனை ஆகியிருக்கிறது.

Next Story